ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 68 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) அடித்தார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4ஐ எட்டியது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவர்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஹர்திக், பண்ட், சூர்யகுமார் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்வதாக அவர் கருதுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரைப் பின்பற்றும் காலம் இருந்தது என்றும் லத்தீப் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூறியதாவது, ஆட்டம் மாறிவிட்டது. டெண்டுல்கர், சேவாக், விராட் கோலி போன்றவர்களை வீரர்கள் பின்தொடர்ந்த காலம் ஒன்று இருந்தது. அவர்கள் தங்கள் சாதனைகளை முறியடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அணியில், அவர்களை பின்பற்றாத 3-4 வீரர்கள் உள்ளனர். ஆம், மரியாதை இருக்கிறது, ஆனால் அவர்கள் எம்எஸ் தோனியைப் பின்பற்றுகிறார்கள். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா கூட அவரைப் போலவே விளையாடுகிறார்கள், ”என்று கூறினார். மேலும் சூர்யகுமார் எந்த நிலையிலும் விளையாடக்கூடிய வீரர் என்று கூறிய லத்தீப், இந்த குறிப்பிட்ட பண்பு தோனியையும் ஒத்திருக்கிறது என்றும் கூறினார்.