ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அரசு செயலாளர், ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பெருநட்டாந்தோப்பு மேல தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தேவேந்திரன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதை பார்த்த அமைச்சர், செயலாளர், போலீஸ் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது தேவேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தில் பெருநாட்டாந்தோப்பு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முனுசாமி மற்றும் அவரின் இரண்டு மகன்கள் சென்ற சில காலங்களுக்கு முன்பாக வேலியை நகர்த்தி அடைத்தனர். இதைத்தட்டி கேட்ட எனது மகளையும் தாக்கி காயப்படுத்தினார்கள். ஆகையால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.