புதுச்சேரியில் ஆடு திருடிய 2 இளைஞர்கள் போலிஸ்ஸில் பிடிபட்டுள்ளனர்.
புதுசேரி திருவாண்டார்கோயில் பகுதி இந்திரா நகரில் வசித்து வருபவர் சற்குண பாண்டியன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் எப்போதும் ஆடுகளை திருவாண்டார்கோயில் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.இதேபோல் சம்பவத்தன்று மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பியபோது அதனை சரிபார்த்துள்ளார். அப்போது, சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பின ரக ஆடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சற்குணப்பாண்டியன் திருபுவனை காவல்நிலையத்தில் ஆடு திருடுபோனது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருபுவனை போலீசார் ஆடு காணாமல் போனதாக கூறப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது இரண்டு இளைஞர்கள் ஆட்டின் கால்களை கயிற்றால் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. வாகன எண் மற்றும் அடையாளங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில், அவர்கள் கொம்பாக்கத்தை சேர்ந்த விஷ்ணு(22), வழுதாவூரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக பல இடங்களில் ஆடு திருடியது தெரியவந்து. விசாரணைக்கு பிறகு இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், திருடப்பட்ட ஆடுகளையும் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.