ஆவணி பிறந்தால் ஆயிரம் நன்மைகள் வரும் என்பது நம் சான்றோர் கூற்று. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக உள்ளது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகும். சிம்ம மாதமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த மாதத்தில்தான் கணநாதர், கண்ணபிரான் அவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குதிரைகளை கொண்டுவந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் நடைபெற்றது. இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்பசுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திரு சேவை சாதிப்பார்.
ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி விரதம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாட்கள் இந்த மாதத்தில் உள்ளது. விழாக்களும் விரதங்களும் மட்டுமல்லாமல் பல ஆழ்வார்களும் அடியார்களும் இந்த மாதத்தில் தோன்றியுள்ளனர். இளையான்குடி மாற நாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் போன்றோரின் குருபூஜை வருவதும் இந்த மாதத்தில்தான். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பது நம்பிக்கை. உங்களின் துன்பங்களை நீக்கும் மாதம் இது. நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இந்த மாதம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.