தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள ஆவடையனுர் சிதம்பரம் நாடார் தெருவில் அருணாச்சலம்(88) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளவர்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினியராக உள்ளார். மற்ற இரண்டு பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயதான தம்பதியர் இரவு வீட்டில் தனியாக இருந்தனர். ஜாய் சொர்ணதேவி வீட்டில் வராண்டாவில் அமர்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து 3 முகமூடி நபர்கள் காம்பவுண்ட் சுவரில் ஏறிகுதித்து உள்ளே புகுந்தனர். அவர்கள் வரண்டாவில் இருந்த பல்புகளை உடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாய் சொர்ணாதேவி கூச்சலிட்டார். அப்போது மர்ம நபர்கள் அவரது வாயில் துணியை திணித்து கைகளை கட்டிவிட்டு விட்டுக்குள் இழுத்துச் சென்றனர். தனது மனைவியை முகமூடி கொள்ளையர்கள் இழுத்து வந்ததை பார்த்த அருணாச்சலம் கூச்சலிட்டார். அவரின் வாயையும் துணியால் கட்டினார்கள். அதன் பின்னர் தம்பதியினரின் கால்களை கட்டி அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி போட்டனர்.
இதனையடுத்து கொள்ளையர்கள் பீரோலை உடைத்து அதிலிருந்து 140 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்று விட்டனர். அதனைதொடர்ந்து வேலைக்குச் சென்று இருந்த ராணி நேற்று நிகழ்ச்சி என்பதால் அதை முடித்துவிட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார். அப்போது தனது பெற்றோர் கைகள் கட்டப்பட்டிருந்ததையும் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.