ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது இலங்கை அணி.
ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிகள் நுழையும். இந்நிலையில் நேற்று சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்7விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார். மேலும் இப்ராகிம் சத்ரான் 38 பந்துகளில் (2 பவுண்டரி, 1 சிக்ஸர்) 40 ரன்கள் எடுத்தார்..இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை எடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். குறிப்பாக குஷால் மெண்டிஸ் ரஷீத் கான் வீசிய 6ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார்.. அதைத்தொடர்ந்து நவீன் வீசிய அடுத்த 7 ஓவரில் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) குசால் மெண்டீஸ் ஆட்டம் இழந்தார்.. இதையடுத்து சூப்பராக ஆடிவந்த நிசாங்கா 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதனை தொடர்ந்து அசலங்கா 8 ரன்களில் வெளியேறினார் அதனைத் தொடர்ந்து தசுன் ஷானகா 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கிடையே மிடில் ஆர்டரில் குணதிலகா சிறப்பாக ஆடிவந்த நிலையில் 33 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் கடைசி கட்டத்தில் பனுகா ராஜபக்சே அதிரடியாக ஆடினார். அதன்பின் பனுகா ராஜபக்சேவும், வனிந்து ஹஸரங்காவும் சேர்ந்து ஆடிய நிலையில், கடைசி 3 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட, ஹஸரங்கா 2 பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது.
பின் 2 ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட அதே ஓவரில் பவுண்டரி அடித்த ராஜபக்சே 14 பந்துகளில் 31 ரன்கள் (4 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்த நிலையில், நவீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட பவுண்டரி அடித்து முடித்தார் சமிகா கருணாரத்னே.. இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 4 வீரர்களும் 30+ ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.. வனிந்து ஹஸரங்கா 16 (9) ரன்களுடனும், கருணாரத்னே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் நவீன், முஜீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. ஆசியக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வியடைந்த நிலையில் இந்த சூப்பர் லீக்கில் அதற்கு பழி தீர்த்துள்ளது.