Categories
மாநில செய்திகள்

“ஆங்கிலத்தில் படிப்பதை சிறந்தது என்று கூற முடியாது” தாய்மொழியில் மட்டுமே கற்க வேண்டும்…. ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஸ்ரீ கோகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துதல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக ‌கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு வித்யா பாரதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணசெட்டி தலைமை தாங்க, 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரகத்தின் போது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் ஆளுநர் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் 2 முறை கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது 3-வது முறையாக புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிறது. உலக மக்கள் தொகையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியா விரைவில் முதல் இடத்திற்கு வரலாம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது மகாத்மா காந்தியிடம் எதற்காக சுதந்திரம் கிடைத்த நாளை கொண்டாடவில்லை என்று கேட்டனர். அதற்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறினாலும் அவர்களுடைய நினைப்பு நம் மனதை விட்டு நீங்கவில்லை. அவர்கள் நம் மூளையை விட்டு வெளியேற வேண்டும் என்றால், நம்மை ஆட்சி செய்த வருடங்களில் பாதி ஆண்டுகளாவது தேவைப்படும் என்றார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டார்கள். தற்போது தாய்மொழி வழி கல்வி இல்லை. நாம் அனைத்தையுமே ஆங்கில மொழியில் தான் கற்றுக் கொண்டிருக்கிறோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது தான் என்றாலும், ஆங்கிலத்தில் படிப்பதை சிறந்தது என்று கூற முடியாது. ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தங்களுடைய தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். அங்கு அறிவியல் பாடத்தை கூட தாய் மொழியில் தான் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் அவரவர் தாய்மொழியில் படிப்பது தான் சிறந்தது என்றார். மேலும் விழாவின் முடிவில் ஆளுநருக்கு கோகுலம் பள்ளியின் தாளாளர் நினைவு பரிசு வழங்கினார்.

Categories

Tech |