கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான 108 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக கொரோனா நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீ பரவியுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸ் அருகே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.