ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளது. திருப்பூரில் சுமார் 20000 மேற்பட்ட பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர் மற்றும் மறைமுகமாக நான்கு லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு 70 வரை உயர்த்தப்பட்டது.
ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாக நூற்பாலை சங்கங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல் ரகங்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது எனவும் ஜூலை ரூ.40 விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். நூல் விலை ரகத்துக்கு ஏற்றபடி ரூ.320 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.