அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ்(6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அபினேஷ் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அங்கு சென்று மகனை தேடி பார்த்தனர். அப்போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் இருந்த தண்ணீரில் சிறுவன் மூழ்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அபினேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.