திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் சிதம்பரமும், ராஜம்மாளும் 4-வது மகனான கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகுந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 30-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனால் சிதம்பரம் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிதம்பரம் ராஜம்மாளின் உடல் அருகில் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அதனை கண்ட அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரை தூக்கி பார்த்துள்ளனர். அதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் அருகருகே வைத்து அஞ்சலி செலுத்தினர். மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.