தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவு ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் போண்டாமணி 2 சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் போன் மூலம் தொடர்பு கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு தேவையான உதவி செய்து வருகிறார். இது பற்றி கூறிய அவர், தகவல் கேள்விப்பட்டவுடன் நான் மருத்துவர் பக்தவத்சலத்துடன் பேசினேன். போண்டாமணிக்கு என்ன தேவை அதை செய்ய இருப்பதாக கூறினார். அதன்படி தற்போது அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர் கூறினார். முதல் கட்டமாக போண்டாமணி அன்றாட தேவைக்கு வேண்டிய பண உதவி என்னுடைய மனித நேய மன்றத்திலிருந்து செய்திருக்கிறேன். இன்னும் அவருடைய வேண்டிய உதவிகளை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.