காஞ்சிபுரத்தில் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் அம்மன் என்ற ஊரில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னதாக கொலை வழக்கு ஒன்றில் ஈடுபட்டு தற்போது கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் அப்பகுதியிலிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வடிவேலை கத்தியால் சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த செங்கலாளும் அவரை அடித்துள்ளார்கள்.
அப்போது வடிவேலுவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தவுடன் மர்மநபர்கள் ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த வடிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளான இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.