முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க நீர்வளத் துறை அமைச்சருக்கு துணிவு இல்லை என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் 132 அடி நீர்மட்டம் இருக்கும்பொழுதே தண்ணீரை திறந்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்திறப்பு உரிமை தமிழகத்தில் உள்ள நிலையில் கேரளா தன்னிச்சையாக செயல்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் 5 மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினர்.
அதுமட்டுமில்லாமல் அதிமுக கட்சியினர் இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அதில் முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பன்னீர்செல்வம் தான் சொந்த ஊரில் இருக்கும் அணையை ஒரு முறை கூட பார்வையிட்டது இல்லை என்று விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்து வருகிறார். அவரால் கேரள அரசைக் கண்டிக்க முடியவில்லை. அவர்களை கேள்வி கேட்க துணிவில்லை. மேலும் அமைச்சர் துரைமுருகன் தன்னிலை மறந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை குறை கூறி வருகிறார் என்று விமர்சித்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணை பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு முழு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.