ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தடி ஜெயசூர்யா(22) எனும் பி.டெக். பட்டதாரி கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பண்டாரகுளம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பருடன் தங்கியிருந்த ஜெயசூர்யா வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் ஜெயசூர்யா செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் அதனை பார்த்த ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார்.
அதில் ஏராளமான மாடல் அழகிகளின் அரைகுறை புகைப்படங்கள் இருந்துள்ளது. அதில் அழகிகளுடன் பேச, பழக, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயிக்கபட்டிருந்தது. மணிக்கு ரூ.2500 -ரூ.20,000 வரை இருந்ததாகவும், அதில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டியதாகவும் ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும் அதே போல் ஒரே நாளில் ரூ.1லட்சம் வரை பணம் கட்டியதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.