தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் எனக்கு அளிக்கும் கருணை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 60 வயதை கடக்க உதவிய இறைவன் 70 வயதை தொட கூட கருணை காட்டவில்லை என்பதை சோகத்தின் உச்சம். தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்த அம்மா ஜெயலலிதா மறைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய் தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூறுகிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.