முதுமலை முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் பாகன்கள் யானைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்துள்ளனர். அதன்பிறகு முகாமில் யானைகள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் யானைகளுக்கு வெண்பொங்கல், கரும்புகள், மாதுளை, ஆப்பிள் போன்ற உணவுகளை கொடுத்தனர். இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் குடும்பத்தினருடன் வந்துள்ளார். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று வளர்ப்பு யானைகளை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண், வனச்சரகர்கள் விஜயன், மனோகரன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.