அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி புகழ்பெற்ற அருவியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ளதால் பல்வேறு அணைகளுக்கும், அருவிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்காக வருடம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 15-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைப்பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்