2001ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் அரியலூர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதர் சுவாமி கோவில், வீரமா முனிவர் உருவாக்கிய அடைக்கலமாதா ஆலயம் ஆகியவற்றை புகழ் பெற்றவையாகும். கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயமும், பால் உற்பத்தியும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன.
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் தாமரை ராஜேந்திரன். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,64,012 ஆகும். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சிமெண்டு ஆலைக்கு செல்லும் லாரிகளுக்கு தனி பாதை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். குள்ளம்பட்டி வாய்க்காலை தூர் வாரி மதகுகளை செப்பனிட வேண்டும் என்பதும், குளங்கள் ஏரிகளை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும், மணலை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அரசு மகளிர் கலைக் கல்லூரி, படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பால் குளிரூட்டும் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களின் வேண்டுகோள் ஆகும். திருமானுரை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும், கிராமப்புற சாலையை மேம்படுத்துவதுடன் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.