தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் மோடி எந்த இடத்திற்கு சென்றாலும் திருக்குறளை தான் கூறுகிறார். சென்னைக்கு வந்தபோது “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின் செல்வர்” எனக் கூறிய மோடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணத்திற்கு பின்னணியாக உள்ளார்.
வெறும் வாய் ஜாலம் மட்டும் செய்தால் போதுமா.? விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது திமுகவும் காங்கிரசும் தான். பெண்களுக்கு சம உரிமை சொத்தில் சம பங்கு போன்றவற்றைப் பெற்றுத் தந்தவர் கலைஞர். உளுந்த மாவே இல்லாமல் வடை சுட முடியுமென்றால் அது பாரத பிரதமர் மோடியால் தான் முடியும். ரவையே இல்லாமல் உப்புமா கிண்டுபவர் நம்ம எடப்பாடி பழனிச்சாமி. அரிசியை இல்லாமல் பிரியாணி போடுபவர் பாஜக தலைவர் அண்ணாமலை இவர்களுக்கு இணை இவர்கள்தான். இதனால்தான் நம்ம தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பச்சை பழனிச்சாமி என பட்டம் கொடுத்திருக்கிறார். மதத்தால் நாட்டை பிரித்து விடலாம் என நினைக்கிறது பாஜக. இதனால்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜகவால் தமிழகத்திற்குள் நுழைய முடியாது எனக் கூறியுள்ளார்.!” என அவர் கூறினார்.