அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சின்ன கண்ணாரத்தெருவில் உத்தமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக உமாதேவி-சக்திவேல் தம்பதியினர் கூறியுள்ளனர். இதனை நம்பி உத்தமராஜன் தனக்கு தெரிந்த 5 நபர்களிடமிருந்து ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்தை கடனாக வாங்கி உமாதேவி- சக்திவேல் தம்பதியினரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அந்த தம்பதியினர் உத்தமராஜனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை உத்தமராஜன் அந்த தம்பதியினரிடம் திரும்பக் கேட்டுள்ளார்.
அதன்பின் உமாதேவி-சக்திவேல் தம்பதியினர் ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். மேலும் மீதமுள்ள 13 லட்சத்து 87 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக உத்தம ராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தம்பதியினர் மீது மோசடி வழக்குப் பதிந்து தலைமறைவாகியுள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.