உரிய ஊதியம் கிடைத்திட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது. மருத்துவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்தது தவிர, அவர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைத்துள்ளது. அதில் “தங்கள் ஆட்சி அமைந்து எட்டு மாதங்களுக்குப் பிறகும் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழக சுகாதாரத்துறை 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ? அதே போன்று தான் தற்போதும் உள்ளது.
இருப்பினும் இந்த அளவுக்கு சுகாதாரத் துறையை வலுப்படுத்த தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கி அவமானப்படுத்துவதை நம் முதல்வர் விரும்பமாட்டார். பல மாநிலங்களில் இன்னமும் கிராமங்களில் மருத்துவர் இருப்பு உறுதி செய்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் கிராம சுகாதார சேவையில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு மறுத்து வருவது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.
மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு தங்களுக்கு தேவையான ஊதியத்தை வழங்க வேண்டும். கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்கு சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயை விட குறைவான ஊதியம் தரப்படுகின்றது. எனவே தமிழகத்தின் பலமாக உள்ள அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.