அரசு பேருந்துகளின் போக்குவரத்து கட்டணம் உயர்த்த படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு முக்கிய தளர்வுகள் உடன் அமலில் உள்ளது. பல்வேறு ஆய்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும் போக்குவரத்து துறை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கியமான தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இன்று மீண்டும் இயங்க தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசு பேருந்துகள் இயங்கும். அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும். பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பஸ் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை செல்லும். அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.