அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய தேனி நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து வேலூர் வழியாக கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் தமிழக மற்றும் ஆந்திரா எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை மோப்பநாய் சிம்பாவை வைத்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதன்பின் திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் ஒருவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய ராஜா என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்த படுகிறது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆந்திரா காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆந்திராவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால் இதை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி மோப்பநாய் சிம்பாக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாய்க்கு 45 நாட்கள் அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி அடிப்படையில் காவல்துறையினர் அதன் உதவியுடன் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.