அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் திமுகவை சேர்ந்த சுந்தர் பேசியதாவது வருவாய் துறையில் தடையில்லா சான்று பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளது. கடந்த ஆண்டில் 20 ரூபாய் பத்திரத்தில் தேவைப்படும்போது மின் இணைப்பை துண்டித்து கொள்ளலாம் என எழுதி வாங்கிவிட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றம் செல்லும் பொழுது நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் மின் இணைப்பு கொடுத்தால் சட்ட சிக்கல் ஏற்படும். எனவே எந்த பகுதியில் மின் இணைப்பு வழங்கவில்லை எனத் தெரிந்தால் அந்த நிலத்தின் வகை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக முதல்வர் வழிகாட்டுதலை பெற்று, மின் துறை, வருவாய்துறை இணைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். எம்.எல்.ஏ.,க்களுக்கான ஒரு இலவச மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் மின் இணைப்பு கிடையாது என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.