தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாநகரில் பொள்ளாச்சி சேரிபாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.