தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு, முந்தைய பள்ளிகள் அவற்றின் தனித்தன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறிய அவர், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அரசு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 150 கோடி செலவில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம், ரூபாய் 200 தனி கட்டணம் வசூல் செய்யப்படுவது முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.