புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டு பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக அரசுக்கு புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கடந்த 2009ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்கும், 2010ம் வருடம் துணை தாசில்தார், சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கும் மற்றும் 2012ம் ஆண்டு கீழ்நிலை எழுத்தர் பணிக்கும் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதற்கான பணி நியமனமானது கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் புதுச்சேரியில் வேற எந்த போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது பல வாக்குறுதிகளை கொண்ட அறிக்கை வெளியிடபட்டது. அதில் அரசு துறைகளிலுள்ள 9400 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அரசு போட்டி தேர்வுகளில் விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.