நடப்பு ஆண்டு தீபாவளி தினத்தையொட்டி டாஸ்மாக்கின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியது. தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாக தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று என்றும் தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் இலக்கு என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக் காட்டிய பின் தனியார் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிந்ததும் நிர்வாகத்திற்கே முழு விபரங்கள் வந்து சேராத சூழ்நிலையில், விற்பனை விவரம் என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
அரசு நிறுவனங்கள் மீதான தவறான பிம்பத்தை உருவாக்கும் அடிப்படையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம்கூட இன்றியும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி செயல்படுவது தவறான ஒன்று. இவ்வாறு டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தனியார் தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்