அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செயலாளர் சுவர்ணா, அரசு துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம். மேலும் இந்த உத்தரவை மீறுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.