தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் 50% பேர் அலுவலகத்திற்கு வரலாம் என்றும், மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் (Work From Home) என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம் உட்பட பல்வேறு மாநில அரசுகள், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசானது அரசு ஊழியர்களுக்கு அதுபோன்று எந்தவொரு அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
ஆகவே கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 50% ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், கொரோனா அச்சத்துடன் வந்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தமிழக அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.