அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி வேகமாக பரவி வருகிறது.
இந்தக் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மூன்றாவது அலையின் காரணமாக இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுவோர் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைதொடர்ந்து தகுதியானவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அசாமில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கேஷப் மஹந்தா தொடங்கி வைத்தார். இதற்கு பின்னர் பேசிய அவர், அசாம் மாநில அரசு ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதி, அவர்களுக்கு பல கட்டங்களாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உட்பட பல துறை ஊழியர்கள், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார்.