ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 11-வது ஊதிய திருத்தக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தாங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக 11-வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர்கள் சங்கத்தின் மூத்த அதிகாரிகள், வருகின்ற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி முதல் மாநில அரசின் ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் நாளை மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளோம். எனவே மாநில அரசு ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 25-ஆம் தேதி முதல் ஊழியர் சங்கங்கள் புதிய ஊதிய உயர்வுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மாநில அரசு 11-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதை திரும்ப பெறாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.