ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் விமான நிலையமும் மூடப்பட்டது.
மேலும் ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது என்றும், தயக்கமின்றி ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல பணிபுரியலாம். அதற்கு எந்தவித தடையும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.