அரியானாவில் 12 வயது சிறுமியை வைத்து மேம்பாலத்தை திறக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரியானா மாநிலம் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதா மற்றும் ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அரியானாவில் மிக தீவிரமாக இருக்கின்றது. இதனால் அந்த கிராமத்தில் அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் 12 வயது சிறுமி ஒருவர் இந்த மேம்பாலத்தை திறந்துள்ளார்.
ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி சிறுமியான குஷிலகராவை வைத்து மேம்பாலத்தை திறந்துள்ளனர். மேலும் பாலத்தை திறந்து வைத்த கௌரவம் அந்த சிறுமிக்கு சேர்ந்துள்ளது.இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாவது: தற்போது நிலவும் சூழ்நிலையில் தலைவர்கள் மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு அழைப்பு விடுக்க முடியாது. இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறிவிட்டு எங்கள் கிராமத்து மகளை வைத்து பாலத்தைத் திறந்துள்ளோம். அந்த பாலம் எங்களுக்கு மிகவும் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.