கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் மாதன் மற்றும் அம்பிகாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தான். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் மாணவன் இருந்துள்ளான்.
அதனால் கடந்த சில நாட்களாகவே மாணவன் விக்னேஷ் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மாணவன் விக்னேஷ் மாயமானார். அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மாணவனின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் மாணவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், அம்மா அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியாது.
இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம் தான். உண்மையை உங்களிடம் கூற எனக்கு பயமாக இருந்தது. இந்த வீட்டில் இருப்பதற்கும் உங்களை அம்மா அப்பா என்று அழைப்பதற்கு எனக்கு தகுதி இல்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். இப்படிக்கு உங்கள் அன்பு மகன் என்று கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.