விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியிலுள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதையடுத்து அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “தமிழக அரசியல் கலாசாரத்தில் பா.ஜனதா கட்சி அதன் பன்முகத் தன்மையை காட்டி வருகிறது. அக்கட்சியின் அணுகு முறை எவ்வளவு கீழ்த் தரமாக இருக்கும் என்பதற்கு மதுரையில் நடைபெற்ற சம்பவம் சாட்சியாக உள்ளது.
சென்ற 10 தினங்களுக்கு மேலாக அனைவரையும் தேசியக்கொடி ஏற்றுங்கள் என சொல்லிவிட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்ட காரில் வந்த தமிழக நிதி அமைச்சரின் கார் மீது செருப்பை வீசியிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தாக்குதலில் ஈடுபட்டவரே அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.வில் வந்து சேரக்கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் நடைபயணம் துவங்க இருப்பது வரவேற்கத்தக்கது” என்று அவர் கூறினார்.