திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை நகரப் பகுதியில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம். சென்ற 13 வருடங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கோவில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றோம்.
இந்த நிலையில் தற்போது ஒப்பந்தத்தினை நிறுத்திவிட்டு ஆணையாளர் உத்தரவின்படி இணை ஆணையர் மூலம் நேரடியாக தினக்கூலி அடிப்படையில் தற்காலிக நியமனம் செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகின்றது. 13 வருடங்களாக கோவிலில் மட்டுமே வேலை செய்த எங்களுக்கு திடீரென வேறு வேலை தேட முடியவில்லை. இந்த வேலையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. திடீரென வேலை இல்லாமல் போனால் எங்களின் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஆகையால் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு வழங்கினால் உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின் ஆட்சியரிடம் இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.