கொரோனா காலத்தில் ஆன்லைன் கற்றல் வாயிலாக பல கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அமேசானும் “அமேசான் அகாடமி” என்ற புது கற்றல் தளத்தைத் துவங்கியது. முன்பு இந்த கற்றல் நிறுவனமானது “ஜேஇஇ ரெடி” என அழைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை வழங்கி வந்தது.
இந்த நிலையில் “அமேசான் அகாடமியை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அமேசான் செயல்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காக அவ்வப்போது மதிப்பீடு செய்துவருகிறது.
தயாரிப்புகள், சேவைகளின் முன்னேற்றம் மற்றும் திறனை மேம்படுத்தும் அடிப்படையில், மதிப்பீட்டின் வகையில் அமேசான் அகாடமியை நிறுத்த முடிவுசெய்துள்ளோம்” என்று கூறினார். இம்முடிவால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இப்போது பயிற்சியிலுள்ள மாணவர்கள் 2024 அக்டோபர் வரை பயிற்சியைப் பெற இயலும். இந்த ஆண்டு தொகுப்பில்(பேட்ச்) சேர்ந்துள்ளவர்கள் தங்களது முழுக் கட்டணத்தையும் திரும்பப்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.