அமெரிக்க நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகிறது. அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கொரோனாவின் மாறுபாடான பிஏ.2 வகை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையான தொற்றானது தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து வருகிறது. இருந்தாலும் சுகாதார நலனை முன்னிட்டு முகக்கவசம் அணிதலை பைடன் அரசாங்கம் தொடர்ந்து பல காலகட்டங்களில் நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவது, உயிரிழப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என அறிவித்தது. இந்த சூழ்நிலையில் புளோரிடா மாகாண பெடரல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், விமானங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை தள்ளுபடி செய்துள்ளார். இது அமெரிக்க சுகாதார அதிகாரிகளின் அதிகாரத்திற்கு உட்படாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.