அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீசாட்செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் சீனாவின் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 106 செல்போன் செயலிகள் தேசப் பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிப்பதாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அரசு மற்றும் குடியரசு கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியிருந்த நிலையில், அந்த தடை உத்தரவில் நேற்று அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு பற்றி அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில், சில நிறுவனங்கள் கண்டறிந்த செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பெருமளவில் இருக்கின்றன. இந்த செயலிகள் அனைத்தும் தேசப்பற்று, வெளியுறவு கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
அதனால் இந்த செயலிகள் பற்றி பரிசீலனை செய்யவும், ஆய்வு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக் டாக் செயலி, அதனை பயன்படுத்துபவர்களின் விவரங்கள் அனைத்தையும் மறைமுகமாக கையாண்டு விடுகிறது.மேலும் அமெரிக்க மக்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் ஆகியவற்றை செயலிகள் மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்கிறது. இதன் மூலமாக அமெரிக்க மக்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அனைவரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளவும், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், மிரட்டவும் இயலும்.
அதிபர் டிரம்ப் இது பற்றி கூறுகையில், இத்தகைய அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதே சமயத்தில் சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீசாட் சமூக வலைதளம் மற்றும் பணம் அனுப்பும் தளம் ஆகியவற்றை தடை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த தடை உத்தரவானது வருகின்ற 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும். மேலும் உத்தரவை அமல்படுத்துவதற்கு வர்த்தகத் துறை அமைச்சகத்திற்கு முழு அதிகாரம் அளிக்கிறேன், என்று டிரம்ப் கூறியுள்ளார்.