இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப் போட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அமைதியான போராட்டத்தில் கடந்த 9ஆம் தேதி வன்முறை வெடித்துள்ளது.
மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதன் காரணமாக விரக்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் அரசிற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காரணத்தினால் நாடு இதுவரை கண்டிராத வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறது. மேலும் இலங்கை முழுவதும் பரவிய இந்த வன்முறை சம்பவங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் மந்திரிகள் உட்பட ராஜபக்சே ஆதரவாளர்கள் சுமார் 58 பேரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதலும் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பாளர்கள் இடையை நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர்களில் எம்பி மற்றும் போலீசாரும் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் தலைநகர் கொழும்பு போன்ற பல பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால் கலவரக்காரர்களை கண்டதும் சுட படையினருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார்.
இதன்மூலமாக நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் குறைய தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு வழங்கப்படும் எனவும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.