ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது பற்றிய அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழுவானது நேற்று விவாதித்துள்ளது. அதில் அமர்நாத் புனித யாத்திரையானது வருகிற ஜூன் 30-ம் தேதி தொடங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, அமர்நாத் யாத்திரை வருகின்ற ஜூன் மாதம் 30ஆம் தேதி கொரோனா விதிமுறைகளுடன் தொடங்கி, பாரம்பரிய முறைப்படி ரக்ஷா பந்தன் அன்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புனித யாத்திரையானது 43 நாட்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.