போலியான மது ஆலையை நடத்திய 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கணேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கணேஷ், சிவகாசியை சேர்ந்த ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த கோபால் ஆகியோர் கதிரேபள்ளி கிராமத்தில் இருக்கும் குடோனில் போலியான மது ஆலை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் குறைந்த விலைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர்.
இதனை அடுத்து கர்நாடக மது பானங்களை தமிழக டாஸ்மாக் மது பாட்டில்களில் ஊற்றுகின்றனர். அதன்பிறகு அதில் தமிழக மதுபானங்கள் போல ஸ்டிக்கர் ஒட்டி ஓசூர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல லட்ச ரூபாய்க்கு மதுபானங்களை விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த போலி மது ஆலை குடோனுக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அங்கிருந்த 700 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபால், ராஜ், கணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.