மத்திய பிரதேசத்தில் பாய் நல சங்கம் எனும் தன்னார்வு அமைப்பு கடந்த 2014 முதல் இயங்கி வருகிறது. ஷகி அகமது என்பவர் தலைமையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் போராடிவரும் ஆண்களுக்கு சட்ட ரீதியில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட சட்டப் போராட்டம், அதிக ஜீவாம்சம் கொடுத்து 18 ஆண்கள் தங்களது மனைவிகளிடம் இருந்து அண்மையில் கோர்ட்டின் மூலம் விவாகரத்து பெற்றனர்.
இவ்விவாகரத்தை கொண்டாட திருமண கலைப்பு என்ற நிகழ்ச்சிக்கு “பாய் நல சங்கம்” ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி போபால் நகரில் வருகிற 18ம் தேதி தனியார் ஓட்டலில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் விவாகரத்து பெற்றதை ஆண்கள் கொண்டாட தன்னார்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி சில பெண்கள் அமைப்புகள் இந்த கொண்டாட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஆண்கள் விவாகரத்து பெற்றதை கொண்டாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை தன்னார்வு அமைப்பு ரத்துசெய்துள்ளது.