விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை பரபரப்பு மிக்க தொகுதியாக செஞ்சி விளங்குகிறது. இந்த தொகுதியில் கடந்த 1986 முதல் தற்போது வரை அமைச்சர் மஸ்தான் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் செஞ்சி மஸ்தான் தலைமையில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் செஞ்சி மஸ்தானின் மகன் மொகத்தியர் மஸ்தான் நேர்காணலில் கலந்து கொண்டார். செஞ்சி தொகுதி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மொக்தியார் மஸ்தான் இந்த தேர்தலில் களமிறங்குகிறார் என கூறப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னரே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மொக்தியார் மஸ்தான், தற்போது தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ளார். மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் செஞ்சி பேரூராட்சியில் தலைவராவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவை பொருத்தவரை வாரிசு அரசியல் நடைபெறுவதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் இவரும் தற்போது செஞ்சி மஸ்தானின் மகன் தேர்தலில் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.