உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆதார் எண் இணைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது உதவி ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, திருவண்ணாமலை தாசில்தார் எஸ். சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், தி.மு.க. நகர செயலாளர் ப. கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் கோபால், நகர் மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் உதவி ஆட்சியர் வெற்றிவேல் கூறியதாவது. நமது திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகின்ற 4-ஆம் தேதி முதல் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமிற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். முடிவில் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.முருகன் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.