தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உரிய தகுதிகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து ஜாதியினரையும் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது . இதையடுத்து தமிழக அரசு கடந்த 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் பரிந்துரை செய்து உரிய பயிற்சிகள் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஜாதியினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்று ஸ்ரீதர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அறிவுரை வழங்கி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.