நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான உணவகங்களிலும் மெனு கார்டில் கலோரிகள் குறித்த தகவல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளதாவது: “இனிவரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தாங்கள் வைத்திருக்கும் மெனு கார்டில் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரிகளையும் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதன் மூலமாக உணவு பிரியர்கள் தாங்கள் ஆர்டர் செய்யும் பீட்சா, பர்கர், சிக்கன், சாண்ட்விச் போன்றவற்றில் உள்ள கலோரிகளின் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உணவகங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மெனு கார்டில் கலோரி குறித்த விவரம் இடம் பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் விரைவில் இது அறிமுகம் செய்யப்படும். மேலும் மக்கள் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பற்றியும் எவ்வளவு அளவு கலோரி எடுத்துக் கொள்கிறோம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இதனை பெரிய உணவகத்தில் இருந்து தொடங்கி அதன் பிறகு படிப்படியாக சிறிய உணவகங்களுக்கும் கொண்டு வரப்படும். கூடிய விரைவில் அனைத்து உணவகங்களிலும் இது நடைமுறைக்கு வரும்” என்று உணவு பாதுகாப்பு அதிகாரி இனோசி சர்மா கூறியுள்ளார்.