ராமர் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளும் 200 பேரில் ஒருவராக வாய்ப்பு கிடைக்க கடும் போட்டி துவங்கி இருக்கிறது. இவ்விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை எனில் தீக்குளித்து உயிரை விடுவதாக இந்துமகாசபாவின் தலைவர் மிரட்டியுள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ரவீந்திரகுமார் துவேதி. இவர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை நடத்தும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ரவீந்திரகுமார், “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டும் நாள் எங்கள் வாழ்க்கையில் திருநாளாகும். அதை நேரில் தரிசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் விழா நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை எனில் நான் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.” என எச்சரித்துு எழுதி இருந்தார். இது மாதிரி, பலரும் பலவகைகளில் எச்சரித்தும், வலியுறுத்தியிம் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மெயில் அனுப்பத் தொடங்கி உள்ளனர். இவர்களை சமாளித்து பதில் கொடுப்பது தற்போது விழா குழுவினருக்கு பெரும் சவாலாகி விட்டது.
இப்பிரச்சனையால் ஆகஸ்ட் 5ல் நடைபெறும் விழாவிற்கான அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த அழைப்பிதழ் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற தகவலும் தெரியப்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் தமக்கு அழைப்பு அனுப்பக் கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முதல்வர் யோகி, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பை வீட்டில் இருந்தவாறு பார்த்து ராமாயணத்தின் சுந்தரகாண்டம் படித்துக் கொண்டிருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.